பொன்னியின் செல்வன்

4

பொதுவாக, கதைகளைப் படிக்கும்பொழுது நம் மனதில் பலதரப்பட்ட உணர்வுகள் எழுவதுண்டு. கதையோடு ஒன்றிப்போவதும், காட்சிகளைக் கண்ணெதிரே காண்பதும், கதை மாந்தர்களோடு நம்மை ஒப்பிட்டுக் கொள்வதும், கதை நிகழ்ந்த காலத்துக்கே செல்வது போலத் தோன்றுவதும் அவற்றுள் சில. இவை அனைத்தையும் ஒருங்கே நான் கண்டுணர்ந்த ஒரே புதினம் – அமரர் கல்கி அவர்கள் எழுதிய “பொன்னியின் செல்வன்” !!

கி. பி. தொள்ளாயிறத்து அறுபது-எழுபதுகளில் நிகழ்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளைக் கொண்டு அமைந்த புதினம் இது. அக்காலத்தில் சோழ நாட்டை ஆண்ட இராஜராஜ சோழரை (அருள்மொழி வர்மர்) மையமாகக் கொண்டு அமைந்தது. அவரைப் பொன்னி நதியின் மைந்தராக அனைவரும் கருதவே ‘பொன்னியின் செல்வர்’ என்ற பெயர் ஏற்பட்டது.

எனினும், இக்கதையின் முக்கிய கதாபாத்திரமான வந்தியத்தேவனைப் பற்றி நாம் கூறியே ஆக வேண்டும். ஆதி முதல் அந்தம் வரை, இவரைச் சுற்றியே இக்கதை அமைந்துள்ளது. வல்லவரையன் வந்தியத்தேவன், வல்லத்து இளவரசன், வாணர் குலத்து வீரன் என்றெல்லாம் அழைக்கப்படும் இவர் ஆதித்த சோழரிடமிருந்து தஞ்சையில் உள்ள சுந்தர சோழருக்கும், பழையாறையில் வசிக்கும் குந்தவை தேவிக்கும் ஓலை எடுத்து வருவது முதல் நடைபெறும் நிகழ்வுகளைக் கொண்டு கதை நகர்கிறது.

இனி கதாபாத்திரங்களைப் பற்றிக் கூறுவதை விட, கதையை நவரசங்கள் ததும்ப ஆசிரியர் கொண்டு செல்லும் விதத்தைப் பற்றிக் கூற விரும்புகிறேன். ஒவ்வொரு பாகத்திலும் நான் ரசித்த பகுதிகள் பின்வருமாறு:

பாகம் 1- புது வெள்ளம் :

கந்தமாறனுக்கும் வந்தியத்தேவனுக்கும் இடையே உள்ள நட்பைப் பற்றிக் கூறும் பொழுது, யௌவனப் பிராயத்தில் உள்ளம் ஒன்றுபட்ட நண்பன் கிடைப்பதே பரவசம் என்கிறார். காதலில் இன்பம் உள்ளவாறே துன்பமும் உண்டு என்றும், நட்பில் துன்பத்தின் நிழல் கூட விழுவதில்லை என்றும் நட்பை சிறப்பித்துக் கூறும் விதம் அருமை!!

பாகம் 2- சுழற்காற்று :

 “அலை கடலும் ஓய்ந்திருக்க

அகக்கடல் தான் பொங்குவதேன்!!

நிலமகளும் துயிலுகையில்

நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்!!”

ஓடக்காரப் பெண் பூங்குழலி சோகம் ததும்பப் பாடும் இப்பாடல் என்னை மிகவும் கவர்ந்த ஒன்றாகும். பாடலை அவள் எப்படி பாடியிருப்பாள் என்பதைக் கற்பனையினால் அறிய ஆவல் ஏற்படுகிறது.

பாகம் 3- கொலை வாள் :

கருத்துக்களை எடுத்தியம்புகையில், பழம் பெரும் நூலான ‘திருக்குறளை’ உபயோகிக்க ஆசிரியர் மறந்து விடவில்லை. இந்நூலைப் பற்றி குடந்தை சோதிடர் வந்தியத்தேவனிடம் கேட்கும் பொழுது, அவர் ‘கேள்விப்பட்ட ஞாபகம்’ எனக் கூறுவது என்னை சற்றுத் திகைக்கத் தான் செய்தது!! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இராஜரீக முறைகளைப் பற்றி எழுதிய அறிவாளி எனத் திருவள்ளுவரைக் குறிப்பிடுவது சிறப்பு!!

பாகம் 4- மணி மகுடம் :

நவரசங்களுள் ஒன்றானது நகை என்னும் சுவை. எத்தகைய எழுத்தாளராயினும் நகைச்சுவை உணர்வின்றி எழுதினால் அவர் வெற்றி பெறார். இதனை உணர்ந்து ஆசிரியர், இக்கதையில் ஆழ்வார்க்கடியான் நம்பி என்னும் கதாபாத்திரத்தை முக்கியப்படுத்தியுள்ளார். இப்பாகத்தில், நகைச்சுவையின் சிறப்பை அவர் மனிதர்களுக்கு தெய்வம் அளித்த வரப்பிரசாதம் என எடுத்துரைக்கிறார்.

பாகம் 5- தியாக சிகரம் :

இப்பாகத்தில், எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நிகழ்கின்றன. கதாபாத்திரங்களின் திடீர் மனமாற்றத்தைப் பற்றிக் கூறும் பொழுது, மனித இயற்கை என்றும் ஒன்று போல் இருப்பதில்லை எனக் கூறுகிறார். மனிதர்கள் சூழ்நிலைக் கைதிகள் ஆகும் பொழுது அவர்கள் நடத்தையும் மாறுகின்றது. இக்கருத்தில் தான் எவ்வளவு உண்மை!!

இப்புதினத்தைப் பற்றி எழுத வேண்டுமென்றால், ஒரு புத்தகமே எழுதி விடலாம். படிக்கப் படிக்க சுவாரஸ்யம் குறையாத அரிய காவியம் எனக் கூறினால் அது மிகையாகாது. எனவே, நான் படித்து இன்புற்ற இக்காவியத்தை அனைவரும் படித்துக் களிக்க விரும்புகிறேன்.

பொன்னியின் செல்வன் – நாவலோ நாவல்!! 🙂

Advertisements